Friday 16 July 2010

மறக்க முடியுமா கும்பகோணம் பள்ளி தீ விபத்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மறக்க முடியுமா கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ
விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.
உண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.
கும்பகோணம் காசிராமன் தெருவில் பகவான் கிருஷ்ணா பெண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி, சரஸ்வதி ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இரண்டு மாடிக் கட்டடத்தில் இவை அமைந்துள்ளன.

தரைத் தளத்தில் உயர் நிலைப் பள்ளி வகுப்புகளும், முதல் தளத்தில் நடுநிலைப் பள்ளி வகுப்புகளும், அதன் மேல் கூரையால் வேயப்பட்ட மேல் தளத்தில் சரஸ்வதி ஆரம்பப் பள்ளியின் வகுப்புகளும் இயங்கி வருகின்றன.

மூன்று தளத்திலும் சேர்த்து சுமார் 900 மாணவிகள் படித்து வருகின்றனர். கூரை வேயப்பட்ட ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவிகள் படித்து வந்தனர்.

இந்தக் கட்டடத்தின் மிக அருகே பள்ளியின் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கிருந்து கிளம்பிய தீப் பொறிகள் மேல் தளத்தில் உள்ள கூரையில் விழுந்தன. பலத்த காற்றும் வீசியதால் காலை 11.30 மணியளவில் அந்தக் கூரையில் தீப் பிடித்துக் கொண்டது.

கட்டடத்தின் மேல் தீப் பிடித்துக் கொண்டதைப் பார்த்த சில மாணவிகள் கூச்சல் போடவே, தரைத் தளத்திலும், முதல் தளத்திலும் இருந்த நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவிகள் வேகமாக வகுப்புகளை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

ஆனால், மேல் தளத்தில் இருந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 8, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் உடனே ஓட முடியவில்லை. தங்கள் தலைக்கு மேல் தீ எரிவதைக் கண்ட பிஞ்சுகள் தப்பிக்க முயலவில்லை.

இந் நிலையில் கூரை முழுவதும் தீ பரவி, முழுக் கூரையும் தீயுடன் அப்படியே மாணவிகள் மீது விழுந்துள்ளது. இதனால் பல மாணவிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சிறுமிகள் கதறித் துடித்துக் கொண்டிருக்க, மளமளவென எல்லா பக்கமும் பரவியுள்ளது
வகுப்பறைகளில் இருந்து வெளியேறும் வழியும், மாடிப் படிகளும் மிகக் குறுகலாக இருந்ததால் நெருக்கியடிக்குக் கொண்டு ஓடி வந்த மாணவிகளும் நிலை தடுமாறி விழுந்தனர். அதற்குள் தீயின் நாக்குகள் பரவியதாலும், புகை மூட்டம் ஏற்பட்டதாலும் மாணவிகள் மயங்கி விழ, தொடர்ந்து வந்த தீக்கு பலியாகிவிட்டனர்.

தீ பரவியதும் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தோற்ற ஆசிரியர்கள் காயங்களுடன் தப்பிவிட்டனர். (முன்னதாக சில ஆசிரியர்களும் பலியானதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மறுத்தார்).

தீயணைப்புப் படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைக்க பள்ளிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தீ மிக பயங்கரமாக எரிந்ததால் தீயணைப்பு வண்டிகளால் உள்ளே நுழைய முடியவில்லை. தீயணைப்பு வீரர்களும் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர்.

பின்னர் கிரேன்களின் உதவியால் பள்ளியின் சுவர்களை உடைத்துக் கொண்டு தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். கும்பகோணம், தஞ்சாவூர், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.

மிகுந்து சிரமத்துக்குப் பின்னரே தீயை அணைக்கும் பணியை அவர்களால் தொடங்க முடிந்தது. 2 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் பரிதாபமாக கருகி இறந்துவிட்டனர். தீ எரிந்தபோது ஓடி வந்த பல குழந்தைகளின் பெற்றோர்கள் தீயையும் மீறிக் கொண்டு பள்ளிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த 32 மாணவிகள் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளிலும் மேலும் பல மாணவிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துவிட்டது.

4 comments:

Anonymous said...

மறக்க முடியுமா
இன்னும் பள்ளி தாளாளர் சுதந்திரமாக டான் சுற்றி வருகிறார், நாளை திறப்பு வெளியாகும் நாள்

Anonymous said...

CLICK TITLES READ

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்

மத‌த்திணிப்பு வேண்டாம்.!! நல்லுதாரணம்.!!!

==============

said...

http://www.24dunia.com/tamil-news/shownews/0/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/538965.html

said...

மறக்க முடியுமா?..
தயவுசெய்து இதை படியுங்கள்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html