Wednesday 30 June 2010

மனைவியை அனுப்ப மறுத்த மாமியார் வெட்டிக்கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை வெட்டிக் கொலை
செய்தார். அதிர்ச்சியில் மாமனார் இறந்துவிட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் அருகேயுள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(58). அமராவதி சர்க்கரை ஆலையில் காவலாளியாக இருந்தார். மனைவி காளியம்மாள் (50). இவர்களது மகள் பத்மாவதியை (32) கர்நாடக மாநிலம் சீர்நள்ளியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜனுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ராஜனும் பத்மாவதியும் சீர்நள்ளியில் வசித்து வந்தனர். அவர்களது மகள்கள் பிரியா (14), கார்த்திகா (13) இருவரும் பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கி படிக்கின்றனர்.

பத்மாவதிக்கும், ராஜனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று அங்கு வந்த ராஜன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். பத்மாவதி சம்மதிக்கவில்லை. காளியம்மாளும் மகளை அனுப்ப மறுத்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பழனிச்சாமி வேலைக்கு சென்றதும் மற்றவர்கள் வீட்டில் படுத்திருந்தனர். அங்கு வந்த ராஜன், அரிவாளால் காளியம்மாள் தலையில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த பத்மாவதியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ராஜன் தப்பிவிட்டார்.

முகத்தில் காயம் அடைந்த பத்மாவதி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து பழனிச்சாமி, வீட்டுக்கு ஓடிவந்தார். மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விழுந்தார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

பத்மாவதி கொடுத்த புகாரின்பேரில் மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய ராஜனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: