Thursday, 3 June 2010

பா,மா,கா, சேர்ப்பு தி.மு.கா.வின் பலன்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் நாட்டில் 2011 - ஆண்டு நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் பாய் விரிக்கும் என்பது நிச்சயமாகிவிட்டது. கடந்த சில வருடங்களாக மருத்துவரும் மருத்துவர் மகன் அன்புமணியும் திமுகவையும் அதன் தலைவர்களையும் காய்ச்சி எடுத்தனர். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் அன்புமணியின் பேச்சு திமுகவினரையே திகிலடைய வைத்தது. திமுகவை விரட்டிவிட்டுத்தான் ஓய்வோம்... உட்காருவோம்.. உறங்குவோம் என மேடைக்கு மேடை முழக்கமிட்டார். ஆனால், இப்போது அந்த இரு கட்சிகளும் கை கோர்க்கப் போகின்றன. கலைஞர் கருணாநிதியை பார்க்கப் போவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போதே கட்டுச் சோறு கட்டத் தொடங்கி விட்டனர். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... என்று சொன்னாலும் இவ்வளவு கேவலமாகவா .... என அரசியல் பார்வையாளர் ஒருவர் அங்காலாய்க்கிறார். இந்த விஷயத்தில் கலைஞர் பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து இருக்கிறார். மருத்துவரும் அன்புமணியும்தான் மண்டை காயத் திட்டினார்கள். ஆனால், கலைஞர் எந்த நேரத்திலும் காயப்படுத்தவில்லை. அவருக்கு தெரியும். "போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு" என மருத்துவர் மனம் திருந்திய மைந்தனாக வந்து விடுவார் என்பது. பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுக்குள் வருவதில் முதலில் துணை முதல்வருக்கு அவ்வளவு விருப்பம் இல்லையாம். ஏனென்றால் மருத்துவ தந்தையும் மருத்துவ மகனும் நடத்திய தாக்குதல் அப்படி. ஆனால், கலைஞர் சில கருத்துக்களை ஸ்டாலின் காதுகளுக்குள் சொன்னவுடன் மறுப்புக் கருத்தை மாற்றி கொண்டாராம். அப்படி என்ன துணை முதல்வரை அமைதியாக்கிய கருத்து.... திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்து தமிழகத்தில் வெற்றி தேடித் தந்தாலும் சமீப காலமாக டெல்லி காங்கிரஸ் தலைவர்களின் போக்கு கலைஞரைக் கலக்கமடைய வைத்திருக்கிறதாம். ஆரம்ப காலத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவன் தான் திமுகவுக்கு எரிதிராவக விருந்து வைப்பார். ராகுல் காந்தி சென்னை வந்து போன பிறகு பல இளம் தலைவர்களும் திமுக தலைவர்களுக்கு எனிமா கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய கார்த்திக் சிதம்பரம் " இனி எத்தனை காலத்துக்குத்தான் திமுவுக்கு பல்லக்கு தூக்குவது. நமக்கு அவர்கள் பல்லக்கு தூக்க வேண்டாமா?" என பகிரங்கமாக ஒரு பல்லவி பாடி இருக்கிறார். இது மாதிரியான பல்லவிகளுக்கு... அனுபல்லவி அமைக்கத்தான் பாட்டாளி மக்கள் கட்சியை கலைஞர் பாசத்தோடு அணைத்துக் கொண்டாராம். பாட்டாளி மக்கள் கட்சியின் மறுபிரவேசத்தால் திமுகவுக்கு இரட்டை நன்மைகள் ஏற்படும் என்பது சற்று உற்றுப்பார்த்தால் தெரியும். காங்கிரஸ் ஏடாகூடமாக நடந்தால் பாட்டாளி மக்கள் கட்சி என்ற கத்தியைக் காட்டி பயமுறுத்தலாம். மருத்துவர் ராமதாஸ் "பழைய குருடி கதவைத் திறடி" என்ற கணக்கில் திமுகவுக்கு திருகு வலி கொடுத்தால் காங்கிரஸைக் காட்டி "கப் - சிப்" ஆக்கலாம். எது எப்படியோ கவிப்பேரரசு வைரமுத்துவே கலங்கிப் போகும் வண்ணம் கோவை செம்மொழி மாநாட்டில் கலைஞரை வாழ்த்திப் பாட இப்போதே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்களாம் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்

0 comments: