Friday 7 May 2010

ஓங்குகிறது தயாநிதி மாறனின் கை..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எங்கே தயாநிதி மாறன் காணாமல் போய் விடுவாரோ என்று ஒரு காலத்தில் இருந்த  நிலை மாறி இப்போது தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் அவருடைய கை ஓங்கி இருக்கிறது என்பதை  அண்மைய சம்பவங்கள் காட்டுகின்றன.

கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் உள்ள உறவு இரும்பை விட இருக்கமானது. மலையை விட வலிமையானது. எந்தப் பூகம்பமும் இவர்களின் உறவை உரசிப்பார்த்தது கூட கிடையாது.

முரசொலி மாறன் இறந்த பின்னர் அந்த இடத்துக்கு தயாநிதியைக் கொண்டு வந்தார் கலைஞர். மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது எல்லாம் ஒரு கட்டம் வரை. இடையில் இரண்டு குடும்பத்துக்கும் நடுவே அணுகுண்டு வெடித்தது. இந்த வெடிப்புக்கு காரணம் மு.க. அழகிரி.

அழகிரிக்கும் தயாநிதிக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. அடிதடி அரசியல் எல்லா காலத்திலும் எடுபடாது என்பது அவரின் எண்ணம். அதோடு மு.க. ஸ்டாலின் மீது தயாநிதிக்கு தனி வாஞ்சை.

எப்படி இருந்தாலும் கலைஞருக்கு பிறகு பங்காளிச் சண்டை கட்சியை பஞ்சராக்கி விடும் என கணக்குப் போட்ட தயாநிதி அதற்கான வேலைகளை மறைமுகமாக செய்தார் என்ற பேச்சு அப்போதே அடிபட்டது.

இந்த நிலையில் தினகரன் பத்திரிகையில் ஒரு கருத்துக் கணிப்பு  வெளியானது. கலைஞருக்கு பின்னால் முதலமைச்சர் நாற்காலியில் அமருவதற்கு தகுதியானர் ஸ்டாலினா...? அழகிரியா.....? என்ற கேள்வி கேட்கப்பட்டு ஸ்டாலின் தான் என்ற கணிப்பும் வெளியிடப்பட்டது.

கொதித்துப் போனார் அழகிரி. இவரின் நெஞ்சில் மூண்ட கொதிப்பு, ஆதரவாளர்களின் கையில் நெருப்பாக மாறியது. தினகரன் பத்திரிகை தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதில் மூன்று ஊழியர்கள் கருகி மாண்டனர்.

அழகிரியும் தயாநிதியும் யார் யாரை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். அப்பாவிடம் ஓடினார் அழகிரி. நான் வேண்டுமா... தயாநிதி வேண்டுமா....? என கலைஞரின் பிள்ளைப் பாசத்துக்கு பரிட்சை வைத்தார். இறுதியாக பாசம் வென்றது. நீண்டகால நேசம்... மோசம் போனது.

தயாநிதியின் பதவி பறிக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளரிடம் பேசிய கலைஞர்," தயாநிதி எதைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன். என்னுடைய நாற்காலிக்கே ஆசைப்பட்டால் என்ன செய்வது" என கண்ணீர் மல்க அறிக்கை விட்டார். திமுக தொண்டர்கள் கரைந்து விட்டனர்.(இந்த அறிக்கையை இரண்டு தரப்பும் மட்டுமல்ல.. மக்களும் மறந்து விட்டார்கள் என்பது தான் வேடிக்கையான உண்மை).

தயாநிதியும் அவருடைய அண்ணன் கலாநிதியும் சாதாரணமான ஆட்கள் அல்ல. இருவருமே புத்திசாலிகள். தொலைக்காட்சி என்றில்லாமல் பல தொழில்களில் வற்றாத குற்றால அருவியாக பணம் கொட்டுகின்ற அதிர்ஷ்டக்காரர்கள். இவர்களைப் பகைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் திமுகவுக்கு இடையூறுகள் நிறைய வரலாம் என அனுபவமான அரசியல்வாதிகள் கலைஞரின் மனதை மாற்றினர். சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதனால் சன்னுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை. முன்னை விட அதிகமாக மக்களின் அபிமானத்தை அள்ளியது. இதுவும் கலைஞரை யோசிக்க வைத்தது.

ஒருவழியாக இரண்டு குடும்பத்தினரும் நடந்த சம்பவங்களை கடந்த சம்பவங்களாக கருதி ஒன்றாக இணைந்தனர். பிறகு என்ன....தயாநிதி மத்திய அமைச்சர் ஆனார். பழைய துறை கிடைக்கவில்லை என்றாலும் பதவி கிடைத்ததே என்ற சந்தோசம் தயாநிதிக்கு.

இப்படி பந்தாடப்பட்ட தயாநிதியின் பக்கம் இப்போது அதிகாரக் காற்று வீசத்தொடங்கி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அழகிரிதான். அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தும் மனம் நொந்து போய் இருக்கிறார். ஆங்கிலம் பேச வரவில்லை. தயாநிதியின் செல்வாக்கைத் தாண்ட முடியவில்லை. டெல்லி பத்திரிகைக்காரர்கள் ஒரு பல்லியைப் போல் அழகிரியைப் பார்க்கிறார்கள். இது ஒருபுறமிருக்க தமிழகத்துக்கு வந்தால் தூணில் இருந்து துரும்பு வரை துணை முதல்வர் படம் தான் பளபளக்கிறது.

ஆகா.. இப்படியே போனால் நமக்கு திரிசங்கு சொர்க்கம்தான் என கணக்கு போட்ட அழகிரி " எனக்கு மத்திய அரசியல் வேண்டாம். மாநிலத்துக்கு வந்து விடுகிறேன்" என அப்பாவிடம் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

இனி சமாதானத்துக்கு சாத்தியமில்லை என்று கலைஞர் டெல்லிக்கு கிளம்பி போனார். கூடவே கனிமொழியையும் கையைப்பிடித்து அழைத்து போயிருக்கிறார். அழகிரியின் இடத்தை நிரப்ப முடியவில்லை என்றாலும் "சனியன் நாக்கில் ஏறி சதிராட்டம்" போட்டதால் பதவியைப் பறிகொடுத்த சசிதரூரின் இடத்தை கனிமொழிக்கு கலைஞர் வாங்கி விடுவார் என அரசியல் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

அழகிரி மாநிலத்துக்கு வந்தால் அண்ணனுக்கும் தம்பிக்கும் கயிறு இழுக்கும் போட்டிதான் நடக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் கூட்டணிக்கட்சியான காங்கிரசும்... கூட்டணிக்குள் வர நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஸ்டாலினுக்குத்தான் வெண்சாமரம் வீசும்.கலைஞருக்கு எப்படி நிழலாக இருந்து எல்லா காரியத்தையும் முரசொலி மாறன் செய்தாரோ... அதே மாதிரி ஸ்டாலினுக்கு நிழலாக தயாநிதி இருப்பார்.

காங்கிரஸின் அடுத்த தலைவரான ராகுலுக்கு தயாநிதிமேல் தனிப்பாசம் உண்டு. அதனால் டெல்லியில் தயாநிதி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார். அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் அவரின் செல்வாக்கு பரந்து விரிந்து நின்று ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

அழகிரியும் ஸ்டாலினும் அரவணைத்துப் போவார்களா... அடித்துக் கொண்டு பிரிவார்களா... என்பதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தயாநிதியின் வளர்ச்சி என்பது காலம் நிர்ணயித்த நிதர்சனமான உண்மை என்பது அவர்களின் அழுத்தமான வாதம்.

0 comments: