Friday, 7 May 2010

காதலிக்காக நடந்த ரவுடி சின்னா, வக்கீல் படுகொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காதலிக்காக ரவுடி சின்னா என்கிற சின்னகேசவலுவும், அவரது வக்கீல் பகவத் சிங்கும் கொலை செய்யப்பட்டதாக கொலையாளிகளின் வாகன ஓட்டுநர் வேல்முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னா என்ற சின்னகேசவலு (42). வட சென்னையின் மிக மிக மோசமான ரவுடிகளில் முக்கியமானவர். கடந்த 30-ந் தேதி பூந்தமல்லி கோர்ட்டில், வெடிகுண்டு வழக்கு தொடர்பாக வக்கீல் பகவத் சிங் உள்ளிட்டோருடன் வந்திருந்தார். அப்போது கோர்ட்டுக்கு வெளியே வைத்து ரவுடி சின்னாவை ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டுத் தப்பியது. சின்னாவைக் காக்க முயன்ற வக்கீல் பகவத்சிங்கும் படுகொலையானார். இது குறித்து 7 தனிப்படைகள் அமைத்து சென்னை புறநகர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவன் தனது காதலி அஞ்சலையுடன் சேர்ந்து இதைச் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், பாரிவாக்கம் என்ற இடத்தில் கொலைக்கும்பலில் ஒருபிரிவினர் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீஸார், அங்கிருந்த குன்றத்தூர் நந்தம்பாக்கம் வேல்முருகன் (24), சதீஷ் (23), ராஜி (24), கே.கே.நகர் ராகேஷ் (24) ஆகியோரைப் பிடித்தனர். சின்னா மற்றும் வக்கீல் பகவத்சிங்கை கொலை செய்தபோது வேல்முருகன் கார் டிரைவராக இருந்து செயல்பட்டுள்ளார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வேல்முருகன் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், கொலை செய்யப்பட்ட சின்னாவும், சுரேசும் சில ஆண்டுகளுக்கு முன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அப்போது புளியந்தோப்பு பகுதியில் கணவனை விட்டு பிரிந்து வந்த அஞ்சலை என்ற பெண்ணுடன் சின்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சின்னா தனது காதலியாக அஞ்சலையை வைத்திருந்தார். இந்த நிலையில் ஆற்காடு சுரேசுக்கு அஞ்சலையுடன் தொடர்பு ஏற்பட்டது. அஞ்சலையை ஆற்காடு சுரேஷ் தனியாக அழைத்து சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டன. மேலும் யார் பெரிய ரவுடி என்பதிலும் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சின்னாவை போட்டுத்தள்ள சுரேசும், சுரேசை போட்டுத்தள்ள சின்னாவும் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தனர். சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு சின்னா, அஞ்சலையை பார்க்க சென்றார். அப்போது பிரச்சினை ஏற்பட்டு அஞ்சலையை சின்னா கடுமையாக தாக்கினார். தனது இடத்திற்கு வந்து காதலியை சின்னா தாக்கியதை கண்ட சுரேஷ் கோபம் கொண்டு சின்னாவை பழி தீர்க்க திட்டம் வகுத்தார். இதற்காக குன்றத்தூரில் உள்ள வேல்முருகன் கோஷ்டி, தாம்பரத்தில் சிசிங் ராஜா கோஷ்டி மற்றும் புளியந்தோப்பில் உள்ள தனது கோஷ்டியை இணைத்து கொலைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். இதற்காக வேல்முருகன் ஒரு காரிலும், ஆற்காடு சுரேஷ் ஒரு காரிலும் ஆயுதங்களுடன் சின்னாவை கண்காணித்தனர். சின்னா எங்கு செல்கிறார் என்பதை 4 பேர் மோட்டார் சைக்கிளில் கண்காணித்தனர். கடந்த 30-ந் தேதி சின்னா வழக்கில் தீர்ப்பு வந்தால் கேரளாவிற்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்தார். இதனால் தீர்ப்பு வருவதற்குள் சின்னாவை கொலை செய்ய ஆற்காடு சுரேஷ், அவருடைய காதலி அஞ்சலை, நண்பர்கள் சிசிங் ராஜா, ராயபுரம் துரை, தாம்பரம் ஆதி, பாய்கடை சரவணன், அஞ்சலை மகன் எழில், ராஜேஷ் உள்பட 21 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைக்கு தயாராக பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதிகளில் சுற்றி வந்தது. பகல் நேரத்தில் கோர்ட் வாசலில் கொலை செய்ய திட்டமிட்டபோது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்ததை கண்ட இந்த கும்பல் சற்று பின்வாங்கியது. அப்போது சின்னா காரில் வெளியே செல்வதை கண்டதும் அந்த கும்பல் பின் தொடர்ந்து வந்தது. குமணன்சாவடியில் ஒரு தெருவில் கார் நின்றதை கண்டதும் ரவுடி ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்து காரில் இருந்த சின்னாவையும், வக்கீல் பகவத்சிங்கையும் வெட்டி கொன்றனர் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. கொலை மற்றும் கைது நடவடிக்கை தொடர்பாக சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூறுகையில், சின்னா மற்றும் வக்கீல் கொலை வழக்கில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தியதில் துப்பு துலங்கியது. சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவருக்கும், சின்னாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து உள்ளது. ஆற்காடு சுரேஷ் மீது கடந்த 2002-ம் ஆண்டு முதல் 4 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த கொலை வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 4 பேரை கைது செய்து உள்ளோம். ஆற்காடு சுரேஷ் உள்பட 17 பேரை தேடி வருகிறோம். விரைவில் மற்றவர்களை பிடித்து விடுவோம் என்றார்.

0 comments: