Saturday 22 May 2010

மங்களூர் விமான விபத்து முழு விவரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 16 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சவூதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் சமீர் என்பவரின் பாட்டி இறுதிச்சடங்கில் பங்கேற்ற வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். பாட்டி இறந்த துக்கத்தில் இருந்த சமீருக்கு ஒரே நேரத்தில் 16 உறவினர்களை பறிகொடுத்தது தாங்கிக் கொள்ள முடியாத சோகமாகி விட்டது. 161 பேரை பலி கொண்ட விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் லட்கோ குளுசிகா. 55 வயதான இவர் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். விமானம் ஓட்டுவதில் இவர் நன்கு அனுபவம் பெற்றவர். விபத்துக்குள்ளான விமானம் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆகிறது. எனவே விமானத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டியை தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடிவருகிறார்கள். அதில் விமானி கடைசியாக பேசியது எல்லாம் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரிய வரும். மங்களூர் விமான விபத்தில் பெண் டாக்டர், சிறுவன் உள்பட 8 பேர் உயிர் தப்பினார்கள். அவர்களில் உமர் பாரூக் என்பவரும் ஒருவர். அவர் விமானத்தின் கடைசிப் பகுதியில் இருந்தார். விமானம் தீ பிடித்து எரிந்தபோது, அதனுள் உமர் பாரூக் சிக்கிக் கொண்டார். அவரது முகம், கைகளில் தீ காயம் ஏற்பட்டது. என்றாலும் துணிச்சலுடன் செயல்பட்டதால் உமர் பாரூக் உயிர் தப்பினார். அந்த அனுபவத்தை உமர் பாரூக் நிருபர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:- நான் வந்த விமானம் முழுவதும் பயணிகள் இருந்தனர். எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் எனக்குத் தெரியாது. விமானம் தரை இறங்க 5 நிமிடமே இருந்ததால் எல்லாரும் உற்சாகத்துடன் இருந்தோம். திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம். சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது. உடலில் தீ பிடித்ததால் பயணிகள் எல்லாரும் கூக்குரலிட்டனர். உதவி, உதவி என்று அலறினார்கள். ஆனால் அந்த காட்டுக்குள் உடனே உதவிக்கு வர யாரும் இல்லை. என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது. என் அருகில் ஒரு பயணி கூட இல்லை. நான் மட்டும்தான் உயிர் பிழைத்ததாக நினைத்தேன். அந்த மலை காட்டுக்குள் தட்டு தடுமாறியபடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன். அதற்குள் அந்த பகுதி கிராமமக்கள் விமானம் விழுந்த இடம் நோக்கி காட்டுக்குள் ஓடி வந்திருந்தனர். தீக்காயங்களுடன் வந்த என்னைப் பார்த்ததும் முதல் உதவி செய்தனர். பிறகு ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து என்னை சிறிது தூரம் அழைத்து வந்தனர். பிறகு என்னை ஒரு ரிக்சாவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மிக மோசமான விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எனக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும். நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன். விமானம் தீ பிடித்து வெடித்ததை நினைக்கும்போது மனம் பக், பக் என அடித்துக் கொள்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு உமர் பாரூக் கூறினார்.

0 comments: