Saturday 17 April 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டனர். ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது. இதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண், சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர். பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல், அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர். முன்னதாக பார்வதி அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: