Monday, 1 March 2010

அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் அழகிரி ஊர்ஜிதம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டில் அரிதாக நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, ஒரே மேடையில் மு.க. அழகிரியும் மு.க. ஸ்டாலினும் வலதும் இடதுமாக சேர்ந்து காணப் பட்டதைக் கண்டு திமுக கட்சியினரே வியப்படைந்து போய் இருக்கிறார்கள். அந்த மேடையில் சகோதரர்கள் இருவரும் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும், திரு ஸ்டாலினை முழு முதல்வராகத் திரு அழகிரி அங்கீகரித்துவிட்டதையே காட்டுவதாகத் தெரிகிறது. மத்திய உரத் துறை அமைச்சரான அழகிரி, ஸ்டாலினைத் துணை முதல்வரே என்று குறிப்பிட்டுப் பேசினாலும் அவரை முழு முதல்வராகவே பாவித்து, மதுரைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி கேட்டார். மாநிலத்தில் அடுத்த ஆட்சியும் திமுக ஆட்சி என்றால், ஸ்டாலின்தான் அடுத்த முதல்வராக இருப்பார் என்று பலரும் நம்புகிறர்கள். என்றாலும் இது பற்றி திமுக தலைவரும் ஸ்டாலின், அழகிரி இருவரின் தந்தையுமான திரு கருணாநிதி இதுவரை நேரடியாக எதையும் அறிவிக்கவில்லை. ஸ்டாலினை முதல்வராக அறிவிக்கத் திரு கருணாநிதி தயங்குவதற்கு அழகிரியே காரணம் என்றும் கட்சியில் ஸ்டாலின் கை ஓங்குவதை அழகிரி விரும்பவில்லை என்றும் செய்திகள் அடிபட்டன. கட்சியில் இருவருக்கும் இரண்டு பிரிவுகள் உதயமாகி வலுவடை கின்றன என்றும் கூறப்பட்டது. ஆனால் மதுரை மாவட்டம் மேலூர் அட்டப்பட்டியில் சனிக்கிழமை நடந்த பெரியார் நினைவு சமத்துவபுரத் திறப்பு விழா அந்தப் பேச்சை எல்லாம் பொய்யாக்குவதாக அமைந்தது. நிகழ்ச்சியில் சமத்துவபுர வரலாற்றைப் பற்றி விவரித்த திரு ஸ்டாலின், “இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சரும், அஞ்சா நெஞ்சரும், என்னுடைய ஆருயிர் அண்ணனு மான மு.க.அழகிரி இந்த சமத்துவபுரத்தைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார். அதையடுத்துப் பேசிய திரு அழகிரி, “தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் கலைஞரும், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அயராது பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். “அதேபோல்தான் நானும் டெல்லியில் உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன்,” என்றார். “மதுரை மேலூர் மக்களுக்காகத் தீட்டப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்ட மதிப்பீடு இப்போது ரூ.296 கோடியைத் தாண்டிவிட்டதால் துணை முதல்அமைச்சர் இந்த திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்கி இதை விரைவில் நிறைவேற்றித்தர வேண்டும்,” என்று ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். இந்தோனீசியாவுக்குச் சென்று தொழிலதிபர்களைத் தான் கவர்ந்து அழைத்தன் விளைவாக அம்பலக்காரன்பட்டியில் ரூ.2000 கோடியில் டிராக்டர் தொழிற்சாலை அமைய இருக்கிறது என்றும் திரு அழகிரி சொன்னார். மூடிக்கிடந்த நூற்பாலை, கிரானைட் ஆலையாக மாற்றப்பட்டு இருப்பது; சிப்பெட் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல்; மதுரை அருகே மருந்து தயாரிக்கும் பயிற்சி நிறுவனம் ஆகியவை தான் மக்களுக்கு ஆற்றும் தொண்டுகளில் சில என்றார் திரு அழகிரி.

0 comments: