Saturday, 6 February 2010

போலீஸ் ஏட்டுக்கு நஷ்டயீடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அண்ணாசாலை போலீஸ் நிலைய ஏட்டு ராஜாராம். இவர் முன்னாள் டிஜிபி மீது உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது: கடந்த 1997ல் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்து, உடல் தகுதி தேர்வுகளில் பங்கேற்றேன். ஆனால், நேர்முகத் தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை. இதனால், கடந்த 11 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை பல வழக்குகள் தொடர்ந்தேன். உயர் நீதிமன்றம் எனது மனுவை விசாரித்து, நேர்முக தேர்வுக்கு என்னை அழைக்க போலீஸ் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், 3 மாதத்துக்கு பிறகுதான் நேர்முகத் தேர்வு அழைத்தனர். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும், விசாரணையின் போது அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய டிஜிபி போலோநாத் தாக்கல் செய்த பதில் மனுவில், நான் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு எழுதவில்லை என கூறியிருந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், 2 தேர்வுகளையும் நான் எழுதியதாக ஒப்புக் கொண்டார். இவ்வாறு நீதிமன்றத்துக்கு பொய் தகவல் கூறிய டிஜிபி மீதும் போலோநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குக்காக பல ஆண்டுகளாக என்னை நீதிமன்றத்துக்கு அலைக்கழித்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. எனவே, எனக்கு நஷ்டஈடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஏட்டு ராஜாராம் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் விசாரித்து, நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பு விபரம்: நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. சில காரணங்களால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், வழக்கு விசாரணையின் போது அப்போதைய போலீஸ் டிஜிபி நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தந்திருப்பது தெளிவாக தெரிகிறது. போலீசார் நீதிமன்றத்துக்கு உண்மையான தகவல்களைதான் தரவேண்டும். அப்போதுதான் நீதித்துறை சரியாக செயல்பட முடியும். நீதிமன்றத்தை போலீசார் ஏமாற்ற கூடாது. இந்த வழக்குக்காக மனுதாரர் பல ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடாக முன்னாள் டிஜிபி வழங்க வேண்டும். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், போலீஸ் துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். வரும் 15ம் தேதிக்குள் நஷ்டஈடு தொகையை தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

0 comments: