Friday, 22 January 2010

குழந்தையை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தந்தை கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிவப்பாக பிறந்ததால் சந்தேகப்பட்டு 2 வயது குழந்தையை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். போலீசில் சரணடைந்த மனைவி, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜபாளையம் அருகே வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (32). கல் உடைக்கும் தொழிலாளி. மனைவி இசக்கியம்மாள் (27). இவர்களது 2 வயது குழந்தை பிரதாப்பை கடந்த 29&ம் தேதி இரவு கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை வீட்டுக்குள் புதைத்துள்ளனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தளவாய்புரம் போலீசில் இசக்கியம்மாள் சரணடைந்தார். குழந்தையை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: திருச்செங்கோட்டில் லாரி கிளீனராக வேலை பார்த்தபோது லாரியை கடத்திய வழக்கில் என் கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை சிறையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் லாரியை கடத்திய வழக்கில் கைதாகி, 6 மாதம் சிறையில் இருந்தார். இந்த நேரத்தில்தான் சிவகிரியில் எனக்கு குழந்தை பிறந்தது. நானும் கறுப்பு, என் கணவரும் கறுப்பு. குழந்தை சிவப்பாக பிறந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது முகச்சாயல் இல்லை என்று கூறி, குழந்தையை வெறுத்தார். குழந்தையால்தான் நமக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதை கொன்றுவிடுவோம் என்றார். அதிர்ச்சியடைந்த நான், ‘குழந்தை வேண்டாம் என்றால் ஏதாவது ஒரு கோயிலில் கொண்டுபோய் விட்டுவிடுவோம்’ என்றேன். கடந்த மாதம் 28&ம் தேதி இரவு எனது கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்தார். பின்னர் குழந்தையை சரமாரியாகத் தாக்கினார். குழந்தை மயக்கமடைந்ததும் இறந்துவிட்டதாக நினைத்து என் கட்டுகளை அவிழ்த்துவிட்டு தூங்கிவிட்டார். மயக்கம் தெளிந்த பின் குழந்தைக்கு பால் கொடுத்தேன். அதிகாலையில் கண்விழித்த கணவர், குழந்தை உயிரோடு இருப்பதை அறிந்து மீண்டும் என்னை கட்டிப்போட்டார். குழந்தையின் வாய், மூக்கை அடைத்து துடிதுடிக்க கொலை செய்து, உடலை வீட்டுக்குள் புதைத்தார். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னை ராஜபாளையத்துக்கு அழைத்துச் சென்றார். கொலுசை அடகு வைத்து சென்னை சென்றோம். பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காததால் மதுரை மாவட்டம் தேனூருக்கு சென்று சேம்பரில் தங்கி வேலை செய்தோம். அங்கிருந்து கணவருக்கு தெரியாமல் சிவகிரிக்கு வந்துவிட்டேன். மனசாட்சி உறுத்தியதால் சித்தப்பா உதவியுடன் போலீசில் சரணடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட இசக்கியம்மாள் ராஜபாளையம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மனைவியைத் தேடி நேற்று மாலை சொந்த ஊரான வேதநாயகபுரத்துக்கு வந்த சந்திரசேகரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

0 comments: