இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மெரினா கடலில் பந்து விளையாடிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன. மற்ற இருவரையும் சடலங்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மாதவரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் சதீஷ்குமார் (21). இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். இவர் நேற்று நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். இவர்களுடன் பெண் நண்பர்கள் 4 பேரும் வந்திருந்தனர். காணும் பொங்கலுக்காக மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடலில் இறங்காமல் இருக்க போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்திருந்தனர். அதை இன்னும் அகற்றவில்லை.
இந்நிலையில், 7 பேரும் கடலில் குளிக்க சென்றனர். அவர்களுடன் வந்திருந்த பெண்கள் கடற்கரையில் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.
தாங்கள் கொண்டு வந்த பந்தை கடலுக்குள் ஒருவருக்கு ஒருவர் போட்டு சதீஷ்குமார் உட்பட நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தை பிடித்து விளையாடுவதில் அவர்கள் கவனம் இருந்ததால், கடலின் ஆழப்பகுதிக்கு செல்வதை அவர்கள் பார்க்கவில்லை.
திடீரென எழுந்த பெரிய அலை, குமார் என்பவரை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், அசோக்குமார் (22), பிரேம்குமார் (22), சுரேஷ்குமார் (28) ஆகியோர் குமாரை காப்பாற்ற சென்றனர்.
ஆனால் கடல் அலையில் 4 பேரும் சிக்கினர். அலையில் சிக்கி கடலுக்குள் சென்ற குமார் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். அவரை காப்பாற்ற சென்ற மற்ற 4 பேரும் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டனர்.
கடற்கரையில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால், 4 பேரையும் காப்பாற்ற முடியாமல் கதறினர். இதுகுறித்து மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அசோக்குமார், பிரேம்குமார் ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கின. மற்றவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tuesday, 19 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment