Tuesday, 8 September 2009

உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீதான தடியடிக்கு மன்னிப்பு கோருகிறேன்: ராமசுப்பிரமணி பதில் மனு தாக்கல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது நடந்த தடியடி சம்பவத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று சென்னை வடக்கு இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணி, உயர் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 19ம் தேதி, உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், கடந்த மாதம் பதில் மனுதாக்கல் செய்தார். இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணி (தற்போது திருச்சி சரக டிஐஜி) நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஜனவரி 29ம் தேதி இலங்கை தமிழர்களுக்காக நடந்த போராட்டத்தில் இருந்து இந்த பிரச்னை தொடங்கியது. அந்த போராட்டத்தையும், பிப்ரவரி 19ம் தேதி நடந்த சம்பவத்தையும் பிரித்து பார்க்க முடியாது. முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் மன்னித்து விடப்பட்டன. அதனால், ஒரு சில வக்கீல்களுக்கு தைரியம் வந்ததாலும், எதையாவது செய்துவிட்டு வெளியே சென்றுவிடலாம் என்று நினைத்ததாலும் இந்த பிரச்னை வந்தது. நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் அந்த இடத்துக்கு எப்படி வந்தார் என்றே தெரியாது. சுப்பிரமணியசாமி, உயர் நீதிமன்றத்துக்கு வந்ததில் இருந்துதான் இந்த பிரச்னை வந்தது. பிப்ரவரி 19ம் தேதி பிரச்னை வெடிக்கும் நிலைக்கு வந்தபோது துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, தடியடி நடத்த உத்தரவு பிறப்பித்தார். அங்கு, கமிஷனர் எப்போது வந்தார் என்று ஞாபகம் இல்லை. உயர் நீதிமன்ற காவல் நிலையத்திலிருந்து போலீசார் வெளியேறி எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு வந்துவிட்டனர். அதன் பிறகுதான் வக்கீல்கள், காவல் நிலையத்துக்கு தீவைத்தனர். பிப்ரவரி 19ம் தேதி பந்தோபஸ்துக்காகத்தான் வந்தோம். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. எனவே நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு, பதில் மனுவில் ராமசுப்பிரமணி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.