இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

நடிகர் மணிவண்ணன் மகள் ஜோதிக்கும், சதீஷ் ரகுநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜோதி-சதீஷ் ரகுநாதன் திருமணம் இன்று காலை சென்னை நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடந்தது. நடிகர் சத்யராஜ், தாலியை எடுத்து ரஜினியிடம் கொடுக்க அதை அவர் மணமகனிடம் கொடுத்து ஜோதி கழுத்தில் கட்ட வைத்தார். மணமக்கள் இருவர் காலிலும் விழுந்து ஆசி பெற்றனர். சீர்திருத்த முறைப்படி திருமணம் நடந்தது. ரஜினி மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
மணிவண்ணன் முதலில் என்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். படப்பிடிப்புகளில் நிறைய பேசுவார். அப்போது அவர் பெரியார் சீடர் என்று யாருக்கும் தெரியாது. நாத்திகவாதி என்பதும் தெரியாது. படையப்பா சூட்டிங்கில் என்னிடம் நிறைய விஷயங்கள் பற்றி சொன்னார். வரலாற்றில் சில முக்கியமான நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டார்.
அண்ணாவுக்கு பெரியார் எழுதிய கடிதங்கள், பெரியாருக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் பிறகு இருவருக்கும் எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறினார். 1947-ல் சுதந்திரம் கிடைத்த போது பெரியார், அதை ஏன் எதிர்த்தார் என்பதையும் எடுத்துக்கூறினார்.
மணிவண்ணன் மூலமாக பெரியார், அண்ணாவைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பெரியார் புத்தகங்களையும் எனக்கு படிக்க கொடுத்தார். மணிவண்ணன் நிறைய சம்பாதிக்கவில்லை. ஆனால் நண்பர்களை அதிகம் சம்பாதித்துள்ளார்.
ஜோதியை மனைவியாக அடைந்ததற்காக மணமகன் சதீஷ் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஜோதி அப்பா மாதிரி இல்லாமல் அம்மா மாதிரி லட்சணமாக பிறந்து இருக்கிறார். இந்த மேடையில் பெண்கள் பேச வரவில்லை. சம உரிமை எங்கே என்றெல்லாம் இங்கே பேசினார்கள். ஆண்களுடன் பெண்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். மேடையில் நீங்கள் பேசுங்கள் வீட்டில் நாங்கள் பேசுகிறோம் என்பது தான் அந்த ஒப்பந்தம். கணவன், மனைவி என்பதைவிட துணைவன் துணைவி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
நல்லா இருக்கும் போது ஆயிரம் பேர் நம்கிட்ட வருவார்கள். கஷ்டம் வரும் போது காணாமல் போய் விடுவார்கள். அப்போதெல்லாம் துணைவனுக்கு துணையாக இருப்பவர் துணைவிதான் கஷ்ட காலத்தில் கூடவே இருப்பவர் துணைவி தான். அதை புரிந்து கொண்டு மணமக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
நடிகர்கள் கமலஹாசன், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், தியாகு, நடிகை குஷ்பு, டைரக்டர்கள் சீமான், சேரன், சிங்கம் புலி, மனோஜ் குமார், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், தயாரிப்பாளர் டி.ஜி. தியாக ராஜன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி., மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலன், மவுனம் ரவி, ரியாஸ் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.