இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி மற்றொரு இயக்குனர் செல்லப்பா மற்றும் சில அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர்.
இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அணு மின் நிலையத்திற்குள், அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் நுழைந்துவிட்டதாக கருதினார்கள். தமிழக அரசு குழு வருவதற்காக கதவுகளை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் அணு சக்தி அதிகாரிகள் உள்ளே நுழைந்து வேலையை தொடங்கி விட்டதாக அவர்கள் எண்ணினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காலை 11.30 மணிக்கு ஆலய மணியை அடித்து ஒலி எழுப்பி மக்களை திரட்டினார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் அங்கு திரண்டு வந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் மெயின்கேட் முன்பு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குள் சென்ற அதிகாரி காசிநாத் பாலாஜி மற்றும் அதிகாரிகளை பொலிஸார் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதற்கிடையே நெல்லையில் இருந்து புறப்பட்ட தமிழக நிபுணர் குழுவினர் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகரியத்திற்கு மாலை 4.15 மணிக்கு வந்தனர்.
ஆனால் அணு மின் நிலையம் முன்பு ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் உடனடியாக நிபுணர் குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் பொலிஸ் டி. ஐ. ஜி. வரதராஜு, கலெக்டர் இரா. செல்வராஜ் கூடங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வந்தனர். உடனடியாக அங்கு கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மை. பா. ஜேசுராஜ், சிவசுப்பிரமணியம் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு கலெக்டர், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 5 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. தமிழக அரசின் நிபுணர் குழுவை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை தடுக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இதனால் அணு விஜய் நகரியத்தில் தங்கி இருந்த நிபுணர் குழுவினர் கூடங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் நிபுணர் குழுவினர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குள் மாலை 5.10 மணிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த சமரசத்தை தொடர்ந்து அணு மின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி உட்பட 3 அதிகாரிகளை, மாவட்ட வருவாய் அதிகாரி உமா மகேஸ்வரி, அணு மின் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றார்.
0 comments:
Post a Comment