Monday 5 December 2011

மல்லிகை பூ விற்பனை: 1 முழம் 30 ரூபாய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டு பிரசித்தி பெற்றது. முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது
 வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

ஆனால் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த 1ஆம் தேதி மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்பனையானது. 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.125-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30-க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.

இன்று காலை மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு விவரம் வருமாறு:-

பிச்சிப்பூ- ரூ.500, கனகாம்பரம்- ரூ.1000, மரிக்கொழுந்து- ரூ.50, வெள்ளைசிவந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.70, அரளிப்பூ- ரூ.70, பட்டன்ரோஸ்- ரூ.120, கேந்தி- ரூ.25, சிவந்தி- ரூ.50, வாடாமல்லி- ரூ.30, கோழிப்பூ- ரூ.40, ரோஜா பூ- ரூ.50, துளசி- ரூ.30, முல்லை- ரூ.700,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்குன்றம், ஆத்துப்பாக்கம், தச்சூர் கூட்டுரோடு, ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து பூ க்கள் வருகிறது. தற்போது பூ வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் இருந்து கோயம்பேடுக்கு காரில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ.600-க்கு கிடைத்தது. இன்று கிலோ ரூ. 900-த்துக்கு விற்கப்படுகிறது. ஜாதிமல்லி கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்ந்து விட்டது. கனகாம்பர பூ கிலோ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. காட்டுமல்லி கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ ரூ.40-க்கும், சாமந்தி கிலோ ரூ. 20-க்கும், ரெட்ரோஸ் கிலோ ரூ.30-க்கும் விற்கப்படுகிறது. ரோஜாப்பூ கிலோ ரூ. 50-ல் இருந்து ரூ. 70-க்கும் பன்னீர்ரோஸ் கிலோ ரூ. 40-க்கும் விற்கப்படுகிறது.

நாளை முகூர்த்த தினம் என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைய பேர் மாலை போடுவதாலும் பூ தேவை அதிகரித்துள்ளதால் நாளை மேலும் விலை உயரும் என்று கோயம்பேடு பூ வியாபாரி பாண்டியன் கூறினார். விலை குறைய இன்னும் 1 வாரம் ஆகும் என்று அவர் கூறினார்.

சென்னையில் 1 முழம் மல்லிகைப்பூ 30 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. (டிஎன்எஸ்)

0 comments: