Monday, 7 February 2011

முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி ஜெயலலிதா ஆதரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதல்வர் கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியால்ட்டி என்கிற கட்டுமான நிறுவனத்திலிருந்து ஒரு மிகப் பெரிய தொகை சென்னையைச் சேர்ந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது; இந்தத் தொலைக்காட்சியின் 60 விழுக்காடு பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுவின் வசமும், 20 விழுக்காடு பங்குகள் மகள் கனிமொழியின் வசமும் இருக்கின்றன என்ற செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கித் தருவதற்காக அவரிடமிருந்து 600 கோடி ரூபாயை  பெற்றவர் தான் இந்தத் தயாளு என்று நீரா ராடியா கூறியுள்ளார். 

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் திரைமறைவு ஊழலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருணாநிதி தொடர்ந்து பேசுவதிலிருந்து, நாட்டிற்கு ரூ 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் மிகப் பெரிய பயனாளிகளில் கருணாநிதியும் ஒருவர் என்பது தெளிவாகிறது.  எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை முழுவதுமாக ஆதரிக்கிறேன்.

இந்தக் கோரிக்கைக்கான காரணங்களும், ஆதாரங்களும் பின்வருமாறு:-

கருணாநிதியின் மகள் என்ற ஒரே காரணத்தால் கனிமொழி இன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி.  கனிமொழி மற்றும் அவரது தாயார் ராசாத்திக்கு சொந்தமான வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் என்கிற கப்பல் நிறுவனம், பினாமிகளின் பெயர்களின் வாங்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள்,  பினாமிகளின் பெயரில் தென் இந்தியா முழுவதும் வரவிருக்கும் ரூ 4,000 கோடி மதிப்பிலான ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் கனிமொழியின் நெருங்கிய நண்பர் ராசாவால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நிகழ்த்தப்பட்ட பிறகு குவிக்கப்பட்ட சொத்துக்கள்.

தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கும் கலாச்சார விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் பொறுப்பை, கனிமொழி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ஜெகத் கஸ்பர் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தமிழ் மையத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது.  இந்த நிறுவனம் சென்னை சங்கமம் என்ற பெயரில் கலாச்சார விழாக்களை நடத்தி வருகிறது.  தமிழ் மையம் என்கிற இந்த அமைப்பிற்கு ராசாவால் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை பெற்ற நிறுவனங்கள் மூலம் ஏராளமான நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கஸ்பர், கனிமொழி மற்றும் அவரது தாயாரால் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் உள்ள வரி ஏய்ப்பு புகலிடங்களுக்கு சென்று சேர்ப்பதில் கை தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

கனிமொழியின் தாயார் ராசாத்தியின் வீட்டில் பணிபுரிபவர்களின் நிதி நிலைமையை கவனித்தாலே ராசாத்தியின் நிதி நிலைமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.  ராசாத்திக்கு சொந்தமான ராயல் எண்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய ரூ 350 கோடி மதிப்புடைய  வோல்டாஸ் நிலம் மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் ரூ 25 கோடிக்கு விற்கப்பட்ட போது தரகராக செயல்பட்டவர் தான் இந்த சரவணன். இந்தச் செய்தி அண்மையில் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது.  இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று வெளிப்படையாக தெரிவித்த ராசாத்தி,

இந்த நிலம் குறித்த தனது கவலையை நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்து இருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தான், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை வெறும் ரூ 2.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார்!

சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள ராசாத்திக்கு சொந்தமான புதிய வீட்டின் குளிர்சாதனப் பெட்டிகளை பழுது பார்த்துக் கொண்டிருந்த ஏ.சி. மெக்கானிக் டேனியல் சாமுவேல் இன்று பல பி.எம்.டபிள்யு சொகுசு வாகனங்களின் உரிமையாளர்  சின்ன மலையில் உள்ள தனது அலுவலகத்தில் கோணிப் பைகளில் பணத்தை வைத்திருக்கும் இவர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெண்மணி க்காக மூணாறு, கோட்டையம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்.  டேனியல் சாமுவேலின் மகள் திருமணம் கொச்சியில் நடைபெற்ற போது, ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட சென்னையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரூ 1 லட்சம் முதலீட்டில் துவங்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜெனிக்ஸ் எக்சிம் என்ற நிறுவனம், ராசாவின் தயவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டி.பி.) நிறுவனத்தின் 380 கோடி ரூபாய் மதிப்பிலான

5.7 விழுக்காடு பங்குகளை தன் வசம் வைத்திருந்தது.  துபாய் நாட்டைச் சேர்ந்த ETA  குழுமத்தின் உரிமையாளரான சையத் சலாவுதீன் என்பவரின் மகனைச் சார்ந்த நிறுவனம் தான் ஜெனிக்ஸ்.  1970-களிலிருந்து கருணாநிதியுடன் நெருங்கிய உறவு வைத்து இருப்பவர் சையத் சலாவுதீன்.  விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்ற பட்டத்தை கருணாநிதிக்கு அளித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையில்  இந்த ஊழல்களில் சையத் சலாவுதீனின் ஈடுபாடு குறித்த விவரமும் இடம் பெற்று இருக்கிறது.  கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள், கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புதிய நூலகக் கட்டிடம், சென்னை தலைமைச் செயலகக் கட்டிடம் ஆகியவற்றை கட்டுவதற்கான பொறுப்பு இந்த ETA குழுமத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது.  முதலில் ரூ 450 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  பென்னாகரம் இடைத் தேர்தலின் போது, ரூ 750 கோடி மதிப்பிலான கட்டடம் என்று தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரையில், புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கான செலவு ரூ. 910 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இரண்டு நாட்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கான செலவு ரூ 1,100 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  ஓர் ஆண்டிற்கு முன்பே இந்தக்  கட்டடத்தின் திறப்பு விழா மிக ஆடம்பரமாக நடத்தப்பட்டு இருந்தாலும், இன்னமும் இந்தக் கட்டடம் முழுமை பெறவில்லை. 

இந்த நிறுவனம் தான் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குகிறோம் என்று கூறி, இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் இந்த மாநிலத்தின் ரூ 2,000 கோடி நிதி உறிஞ்சப்பட்டு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.  இந்தப் பணத்தை வைத்து நவீன மருத்துவமனையுடன் கூடிய 20 நவீன மருத்துவ கல்லூரிகளை 20 மாவட்டங்களில் நிறுவியிருக்கலாம்.  இதன் மூலம் அனைத்துவிதமான  நோய்களுக்கும், தினமும் 20,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இலவச சிகிச்சை அளித்து இருக்கலாம்.  மேலும், ஒவ்வொரு ஆண்டும் 2000 புதிய மருத்துவர்களை உருவாக்கி இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ள மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்க இயக்ககம் மற்றும் வருமான வரித் துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்டவிரோதமாக பெற்ற கனிமொழி, ராஜாத்தி மற்றும் கருணாநிதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்.  நம் நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவிடம் பகைமை பாராட்டும் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்துள்ளது நமது தேசத்தின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து விளைவிக்கும் விதமாக அமைந்துள்ளது மிகுந்த கவலையை அளிக்கிறது. 

கருணாநிதி குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்த கைப்பாவையாக, கருவியாகச் செயல்பட்டவர் தான் ராசா.  இதன் பின்னணியில் உள்ள முக்கியஸ்தர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் ஒவ்வொரு பகுதியையும், திருப்பத்தையும் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதால், நீதி நிலை நிறுத்தப்படும் என்றும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதுமாக திரும்ப மீட்கப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.  அதே சமயத்தில், மத்திய புலனாய்வுத் துறை மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளுக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்கு இது போன்ற பரவலான அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளதா என்பது தான் தற்போதைய கேள்வி.  அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து, இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்து வருகிறேன்.  இந்த ஊழலில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்று காங்கிரஸ் தலைமை கருதினால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments: