Thursday 15 July 2010

5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.
படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார்.
வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.
நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள்.
இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.
நேற்று மதியம் 1 மணி அளவில் அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள்.
வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து நெல்லிக் குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
நன்றி: - மாலைமலர்

0 comments: