Sunday 20 June 2010

பெற்றோரை அவமதிப்பதில் சென்னைக்கு முதலிடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை நகரில் வாழும் வயதான பெற்றோர்களிடம் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு 71.4 சதவீதம் பேர், “எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை” என்று சொல்லி கண்கலங்கினார்கள். இதில் 58.9 சத வீதம் பேர், “மருமகள் எங்களை மதிக்கவில்லை மோசமாக திட்டுகிறாள், மகனும் மருமகளுடன் சேர்ந்து அவமானப்படுத்துகிறான்” என்று தெரிவித்தனர்.
சென்னை நகரில் வாழும் முதியவர்களில் 56 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழவில்லை. தனிமையிலோ, அல்லது முதியோர் காப்பகத்திலோ தான் வாழ்கிறார்கள்.
வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எங்களை மனிதனாகவே குழந்தைகள் மதிப்பதில்லை. உடல் பலகீனம் காரணமாக நடக்கும் சின்ன தவறுகளை கூட பெரிதாக்கி கேவலப்படுத்துகிறார்கள். நல்ல விஷயங்களை அறிவுரையாகச் சொன்னாலும் கேட்பது இல்லை.
“மகனை எப்படி எல்லாம் வளர்த்தேன். மருமகளுடன் சேர்ந்து அவனும், எங்களை அவமதிப்பதை தாங்க முடியவில்லை. மனதை புண்படுத்தும் வார்த்தைகளை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட நிம்மதி தேடி முதியோர் இல்லம் வருகிறோம்.
எங்களால் முடிந்ததை சம்பாதித்து தனியாக வாழ்கிறோம்” என்ற பதில்கள் தான் பெரும்பாலான வயதான பெற்றோர்களிடம் இருந்து வருகிறது.
மருமகள்-மகன் கொடுமை தாங்காமல் பல வயதான பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கே சென்று விடுகிறார்கள். இதில், 80 சதவீத புகார்களை போலீசார் கண்டுகொள்வதே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
65.7 சதவீத முதியவர்கள் போலீசில் புகார் கொடுப்பதால் எந்த பயனும் ஏற்படாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். பெரியவர்களை 23.2 சத வீதம் பேர் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும், 3.6 சதவீதம் பேர் அடி- உதை படுவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் கூட்டி கழித்துப்பார்த்தால் முதியவர்களை, வயதான பெற்றோர்களை வாட்டி வதைப்பதில், மனம் நோகும்படி அவமதிப்பதில் சென்னை நகருக்கு முதல் இடம் என்பது தான் புள்ளி விபரம் தரும் வேதனையான விஷயம்.
நாம் குழந்தைகளாக இருந்த போது கண் போல் காத்து, உயிரைக் கொடுத்து வளர்த்த பெற்றோரும் வயதான காலத்தில் நமது குழந்தைகள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. இதை மனதில் வைத்து முதியோர்களை மதிக்க கற்றுக் கொள்வோம். அவர்களது அனுபவத்தை ஏற்போம். உடல் பலகீனம் காரணமாக அவர்கள் செய்யும் சிறு தவறுகளை மறப்போம்.
நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மனதில் வைத்து முதியவர்களை மதிப்போம். முதியவர்களை அவமதிக்கும் சென்னை என்ற அவப்பெயரில் இருந்து விடுபடுவோம்

0 comments: