இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னை : திருநெல்வேலியில் இறைச்சிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவுகள் தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இம் மாநகர் பகுதியில் அண்மைக் காலமாக சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் புற்றீசல்போல வேகமாகப் பெருகி வருகின்றன. குறிப்பாக நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச் சாலை, வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையப் பகுதி, வ.உ.சி. மைதானப் பகுதி, சமாதானபுரம், நகரம் சுவாமி நெல்லையப்பர் கோயில் சாலை ஆகிய இடங்களில் வேகமாக சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் உருவாகி வருகின்றன.
மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு வரை செயல்படும், இந்த உணவங்களில் இளைஞர்களையும், பள்ளி,கல்லூரி மாணவ - மாணவிகளையும் அதிகமாகக் காணமுடிகிறது. விலை மலிவாக இருப்பதால் இந்த உணவங்களுக்கு இளைய தலைமுறையினர் செல்வது அதிகரித்து வருகிறது. அதேவேளையில் இந்த உணவகங்கள், அண்மைகாலமாக இளைய தலைமுறையினரைத் தாண்டி,பலதரப்பட்ட மக்களையும் ஈர்த்து வருகிறது.
இதனால் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் எத்தனை திறந்தாலும் நன்றாக இயங்கும் என்ற சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக சாலையின் ஒதுக்குப்புறப் பகுதிகளில், பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் பல்கிப் பெருகி வருகின்றன.
பாஸ்ட்ஃபுட் உணவுகள் உடல்நலத்துத்துக்கு மிகவும் தீங்கானது என மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வரும் நிலையில், அந்த உணவில் மேலும் கலப்படம் செய்யப்பட்டு நஞ்சாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மிகவும் கவர்ச்சியாக,சுத்தமாக இருப்பதுபோன்ற மாயத் தோற்றைத்தை ஏற்படுத்தும் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்களில், இறைச்சி கழிவுகளைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகிண்றன. குறிப்பாக, கோழி இறைச்சிக் கழிவில் பெரும்பாலான உணவுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.
திருநெல்வேலியில் கோழி இறைச்சி கிலோ ரூ.140 வரை விற்றுக் கொண்டிருக்கும் இந் நேரத்திலும், இவர்களுக்கு சுகாதார கேட்டுடன் கிலோ ரூ.50 கோழி இறைச்சி விற்கப்படுகிறது.
ஒரு கோழி இறைச்சிக் கடையில் கழிக்கப்படும், அனைத்து இறைச்சி கழிவுகளும் இங்கு மெருகு கூட்டப்பட்டு,சுவையோடு சுகாதாரமற்ற முறையில் பரிமாறப்படுகிறது. ஆனால் இதை சாப்பிடும்போது, உணருவது மிகவும் கடினம். ஏனென்றால் பாஸ்ட்ஃபுட் உணவுகளை வீட்டில் செய்து தயார் சாப்பிடுவதற்கு வாய்ப்பு குறைவு.
இதனால் தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி கழிவு இறைச்சியில் அதிகமான மசாலா பொருள்களை சேர்த்துவிடுகின்றனர். இதன் காரணமாக இந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுபோக்கு,அல்சர் ஆகியவை வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர்ச்சியாக சாப்பிடும்பட்சத்தில் புற்றுநோயும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாநகராட்சி இப்படிப்பட்ட உணவகங்கள் மீது அவ்வபோது நடவடிக்கை எடுத்தாலும், அது அபராதத்துடனும், எச்சரிக்கையுடனும் சென்றுவிடுவதால் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவங்கள் நடத்துவோர் எந்த பயமும் இன்றி, சுகாதாரக் கேடான உணவு வகைகளை அமோகமாக விற்பனை செய்கின்றனர்.
1 comments:
உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே.......
Post a Comment