Wednesday, 7 April 2010

நடிகை யுவராணிக்கு இந்தியன் மூவி நியூஸ் இழப்பீடு : உயர் நீதி மன்றம் உத்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபலமான திரைப்பட நடிகை ஜி. யுவராணி. இவருக்கு வயது 35. தம்மைப் பற்றி தரக்குறைவாகவும் அவதூறாகவும் செய்தி வெளியிட்டதாக பிரசித்தி பெற்ற இந்தியன் மூவி நியூஸ் மலேசிய நிறுவனம், பிரசுர நிறுவனமான கும் அச்சகம், விநியோகிப்பாளர்களான மெந்தகாப் ஏஜென்ஸி ஆகியவற்றுக்கு எதிராக 2003- ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சில திரைப்படங்களிலும் சின்னத் திரையிலும் நடித்தவர் யுவராணி. சித்தி தொடர் இவருக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. மேலும், சர்ச்சைகுரிய சாமியார் நித்தியானந்தாவின் தீவிர பக்தை என்றும் பேசப்பட்டவர். மலேசிய வணிகரை மணம் முடித்து 1988- ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் வசித்து வருகிறார். ஆனால், தற்சமயம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் மூவி நியூஸ் பத்திரிகையில் 1998- ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழிலும் 1998- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழிலும் வெளிவந்த கட்டுரைகள் தம்முடைய கௌரவத்திற்கு இழுக்குச் சேர்க்கும் வண்ணம் இருந்ததாகவும் அந்தச் செய்தி தவறானவை என்றும் வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். தாம் விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டிருந்தது போலவும் ஆண்கள் மீது மோகம் கொண்டவர் என்பது போலவும் அர்த்தம் தொனிக்கும் வகையில் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன என்று அவர் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

யுவராணியின் பெயருக்கும் புகழுக்கும் குந்தகம் விளைவிப்பதுபோல் கட்டுரை அமைந்து இருப்பது மனுதாரரின் சார்பில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தியன் மூவி நிறுவனம்,  விநியோகிப்பாளர் ஆகியோர்  யுவராணிக்கு 70,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதி மன்ற நீதி ஆணையாளர் ஜார்ஜ் வர்கீஸ் தீர்ப்பளித்தார்.ஒப்பந்த அடிப்படையில் சஞ்சிகையை அச்சடித்துக் கொடுப்பதால் கும் அச்சகத்தைக் குற்றவாளியாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

யுவராணி சார்பில் வழக்கறிஞர் எம். மனோகரன் ஆஜரானார்.  இந்த வழக்கு குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்."யுவராணி தற்போது இந்தியாவில் இருக்கிறார். இந்த தீர்ப்பு கேட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மலேசிய மக்கள் அவரை மாற்றுக் குறையாதவர் என எண்ணுவார்கள் என்றும் மலேசிய நீதித்துறை தம்முடைய நற்பெயரை நிலை நிறுத்தி இருக்கிறது என்றும் அவர் ஆனந்தத்தோடு குறிப்பிட்டார்" என்று மனோகரன் தெரிவித்தார்.

0 comments: