இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் சுண்ணாம்பில் கலர் பூசி சத்து மாத்திரை என்று விற்று வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலாவதி, போலி மாத்திரை விற்பனை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை அடங்குவதற்குள், சுண்ணாம்பில் கலர் பூசி சத்து மாத்திரையாக விற்ற சமூக விரோத கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். இதுகுறித்து சென்னையில் துணை கமிஷனர் ஸ்ரீதர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘சின்கோவிட்’ என்ற பெயரில் சத்து மாத்திரை விற்கப்படுகிறது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இதன் பெயரில் போலி மாத்திரைகள் மார்க்கெட்டில் புழங்குவதாக, ‘அபெக்ஸ் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம் போலீசில் புகார் செய்தது. இதுகுறித்து மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 8 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் சுரேஷ், கிரண்குமார் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் டெல்லியில் இருந்து போலி சத்து மாத்திரைகளை வாங்கி, வேலூரில் உள்ள மருந்துக் கடை உரிமையாளர் அமானுல்லா கான் என்பவர் மூலம் மற்ற விற்பனையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் மீனாட்சி சுந்தரம் முக்கியமானவர். இவர், அபெக்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் முக்கிய முகவர்.
ஆனால், அவரே போலி மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். இதனால் அவரை வழக்கில் சேர்த்துள்ளோம். ஏற்கனவே இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் வாங்கியுள்ளதால், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி சோதனை நடத்தினோம்.
அதில் சிங்க், மல்டி வைட்டமின், சிலிகான், கால்சியம் போன்ற கலவைகள் இருக்க வேண்டும். ஆனால், சத்து மாத்திரையில் கால்சியம் (சுண்ணாம்பு) மட்டுமே உள்ளது தெரிய வந்துள்ளது. சுண்ணாம்பு தெரியாமல் இருக்க கலர் சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு துணை கமிஷனர் தெரிவித்தார்.
காலாவதி மருந்து விற்ற மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உட்பட 7 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சய் குமாருக்கு உதவி செய்ததாக சவுகார்ப்பேட்டை முத்தையா முதலி தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு (41) என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து காலாவதி மருந்துகளையும் கைப்பற்றினர். சுரேஷ்பாபுவிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீனாட்சி சுந்தரத்துக்குச் சொந்தமான 4 குடோன்கள், சஞ்சய்குமாருக்கு சொந்தமான ஒரு குடோன்களில் சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 comments:
Post a Comment