இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில், ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், வேதாந்தம் ஆகியோர் நேற்று கோவிலுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, விஸ்வ இந்து பரிஷத் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கால், செயல் தலைவர் வேதாந்தம் ஆகியோர், நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். பூரண கும்ப மரியாதையோடு தீட்சிதர்கள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜரை தரிசித்துவிட்டு ரத்தின சபாபதி அபிஷேகத்தை பார்த்தனர்.
அப்போது அவர்களிடம்,”கோவிலை மீட்டுத் தாருங்கள்’ என, தீட்சிதர்கள், இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். “நீங்கள் கவலைப்படாதீர்கள். நீதி நம் பக்கம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நம் பக்கம் தான் இருக்கிறது. ராமாயணம், மகாபாரதத்தில் சிறு தோல்விக்கு பிறகு தான் வெற்றி கிடைத்தது’ என, சுப்ரமணியசாமி கூறினார். ஒரு மணி நேரத்திற்கு பின், புறப்பட்டுச் சென்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு வந்ததை எதிர்த்து, சென்னை டிவிஷன் பெஞ்சில் தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை, கடந்த 15ம் தேதி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கோவிலை அரசு எடுத்தது சரியே என்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் சுப்ரமணியசாமி, அசோக் சிங்கால், வேதாந்தம் ஆகியோர் கோவிலுக்கு வந்ததால், அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்திற்கு, டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்து கோவில்களை மீட்க இயக்கம் *அசோக் சிங்கால் பேட்டி : சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது. மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் ஒப்படைக்கப்பட்டன. இந்தியாவில் அரசு கையகப்படுத்தியுள்ள கோவில்களை மீட்க இயக்கம் துவக்கப்படும். தி.மு.க., அரசு, இந்து மக்களின் விரோத போக்கை கைவிட வேண்டும். இல்லையேல் விபரீத பலன்களை சந்திக்க நேரிடும். இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசிடம் இருந்து மீட்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நானே வாதாடுவேன். தமிழகத்தில் அரசு எடுத்து எந்த கோவிலிலும் நிர்வாகம் சரியாக நடக்கவில்லை. முறைகேடுகளும், திருட்டுகளும் தான் நடக்கின்றன. ஐகோர்ட் தீர்ப்பு குறித்து முதல்வர் கருணாநிதி, “நடராஜர் காலை தூக்கியுள்ளார்’ என, பதில் கூறியுள்ளார். அவர் காலை தூக்கியிருப்பது கருணாநிதியின் ஆட்சியை தள்ளுவதற்காக என்பதை உணர வேண்டும். இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.
Wednesday, 23 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment