Wednesday, 9 September 2009

ஆடாமல் அலுங்காமல் அதிவேகமாக செல்லும் `புயல் ரெயில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் அடுத்த வாரம் ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கப் போகும் ஆடாமல், அலுங்காமல் அதிவேகமாக செல்லும் புயல் ரெயில் பெட்டிகளின் இறுதிக்கட்ட அலங்கரிப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இறுதிக்கட்ட அலங்கரிப்பு பணிகள் சென்னை-டெல்லி புயல்வேக ரெயில் (டோரண்டோ ரெயில்) போக்குவரத்தை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி சென்னையில் அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயிலுக்காக பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் இருந்து 18 எவர்சில்வர் பெட்டிகள் (ஹை-ஸ்பீடு கோச்) நவீனமுறையில் எழிலுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பெட்டிகள் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள ரெயில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு (யார்டு) கொண்டு வரப்பட்டன. இந்தப் பெட்டிகளுடன் கபுர்தலா ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரவு, பகலாக எவர்சில்வர் பெட்டிகளை அலங்கரிக்கும் இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். `ஹை-ஸ்பீடு கோச்சுகள்’ மற்ற ரெயில் பெட்டிகள் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், புயல்வேக ரெயிலுக்கான எவர்சில்வர் பெட்டிகள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெட்டிகளில் ஸ்பிரிங்குகளுடன் ஏர்-சஸ்பென்சன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் பெட்டிகளில் அதிர்வு குறைவாகவும், சொகுசு அதிகமாகவும் இருக்கும். ஆடாமல், அலுங்காமல் அதிவேகமாக செல்லும் இந்த ரெயில் பெட்டிகள் தீப்பிடிக்காதவை என்பது சிறப்பு அம்சம் ஆகும். இதனால் பயணிகள் முழுபாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும். இன்னும் சில நாட்களில் அனைத்துப் பெட்டிகளும் அழகிய வண்ணத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்டுவிடும். சென்னை-டெல்லி புயல்வேக ரெயில் போக்குவரத்தை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே மம்தா பானர்ஜி வரும் 14-ந் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.